புதன், மார்ச் 29, 2006

பட்டியல் - திரை விமர்சனம்

ஆர்யாவும் பரத்தும் தூள் பரத்துகிறார்கள். ஆர்யா அழகாக இருந்தாலும் அமுல் பேபி போல இல்லாமல் ஒரு தெரு ரவுடி போல பொருந்துகிறார்.

பரத் தான் ஆர்யாவுக்கு நடிப்பிலும் சீனியர் என வெளுத்து வாங்குகிறார்.

பூஜா அழகாக மட்டுமில்லாமல் திறமையுடன் ஜொலிக்கிறார். ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணுக்கே உரிய கூச்சத்துடனும் அசட்டுத் தைரியத்துடனும் நடித்திருக்கிறார். பரத் பலூன்களை சுடுவதை கண்டு மிரளும்போதும் பின்னர் உண்மை தெரிந்தவுடன் காதலை மறக்க முடியாமல் உடைந்து அழும் போதும் தான் நல்ல நடிகை என நிருபிக்கிறார். தமிழ் சினிமா இவரை எப்படி வீணடிக்கப்போகிறதோ என கவலையாக இருக்கிறது.

பத்மபிரியா ஆர்யாவின் காதலுக்காக தவமாய் தவமிருக்கிறார். அந்த ஏமாற்றங்களை அழகாக வெளிப்படுத்துகிறார். நடிக்க மட்டுமல்ல தன்னால் கிறங்கவைக்கவும் முடியும் என தாவணி களைகிறார்.

நல்ல வேளையாக கூலிக்கு கொலை செய்பவர்களை மன்னவனே தென்னவனே என விளிக்கும் பாடல்கள் இல்லை.

கதை ஒன்றும் புதுசில்லை தான். பிதாமகன் கதையில் இருக்கிற டிராமவை எடுத்துவிட்டு படம் எடுத்திருக்கறார். விக்ரம் போல பரத்ததும் சூர்யாவை போன்று ஆர்யாவும் ரசிகாவை போல பத்மப்பிரியாவும் லைலாவை போன்று பூஜாவும் வார்க்கபட்டிருப்பது தேவ ரகசியம் இல்லை. ஆனாலும் காட்சியமைப்பில் ஒரு வேகம் காட்டியிருப்பதால் படம் பார்க்கும் போது இந்த ஒற்றுமை தெரியவில்லை.

இந்த கதை இப்படி முடிவது தான் நியாயம். அதை இயக்குநர் சரியாகவே செய்திருக்கிறார். இது நாயகர்களை நம்பாமல் கதையை நம்பினால் மட்டுமே சாத்தியம்.

கதையில் தேவையில்லாத முடிச்சுகள், வெளிநாட்டு டூயட்டுகள் என எதுவுமில்லை. மருந்துக்கு கூட காவல்துறை இல்லை. கொலை ஏன் எதற்கு என காரணங்கள் இல்லை. அவை முக்கியமல்ல என்பதாலும் நமக்கு அந்த குறையே ஏற்படுவதில்லை. நேர் கோட்டில் படம் விறுவிறுவென நம்மை கட்டிப்டபோட்டுவிடுகிறது. ஒவ்வொரு காட்சியும் கதாபாத்திரமும் பின்னால் வேறு வேலைக்கு காத்திருப்பது முன்னே உணர்த்தப்பட்டாலும் அவை பின்னர் வரும்போது ஆஹா என இருக்கிறது. உதாரணத்துக்கு சாமியிடம் வேலை கேட்கும் அந்த சர்வர். அழகிய தீயே படத்திற்கு பிறகு ஒரு நல்ல வாய்ப்பு அவருக்கு. (பெயர் தெரியவில்லை). சார்லி, சந்திரசேகர் வரிசையில் குணச்சித்திர நடிப்புக்கு ஒருவர் கிடைத்திருக்கிறார்.

யுவன் பிண்ணனியல் பின்னி எடுத்திருக்கிறார். ஆனால் ஏன் மன்மதன் படத்தில் வரும் காதல் வளர்த்தேன் ஆரம்ப இசைக்கோர்வையை எல்லா படங்களிலும் பயன் படுத்துகிறார் என புரியவில்லை.

அறிந்தும் அறியாமல் தந்த இயக்குனர் கண்டிப்பாக சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறுவார். வாழ்த்துக்கள்!

படம் பார்த்த பிறகு எனக்குள் எழுந்த கேள்விகள்:

அனாதையாக இருந்தாலும் இருக்கிற ஒரே நண்பணும் போன பிறகு பலி வாங்க புறப்படுவது நியாயம் என்றாலும், காசு வாங்கிக்கொண்டு என்ன ஏது என்று அறியாமலேயே வெட்டி சாய்க்கும் போது இவர்களுக்கு அந்த உணர்வும் வலியும் எங்கே போகும்?

படம் பார்க்கும் அந்த கூலிகொலையாளிகள், கத்தி எடுத்தவன் மரணம் கத்தியில் என உணர்வார்களா ?
இல்லை!
இந்த தொழிலுக்கு காதல் கூடாது வெறும் சுகம் மட்டும் போதும் என விபரீதமாக தெளிவு கொள்வார்களா?

(திரைப்பட விமர்சனங்களுக்கென தனிப்பதிவு இட்டதனால் என் அ முதல் ஃ வரை யில் இடப்பட்டிருந்த திரைவிமர்சனம் இங்கே மறுபதிப்பாகிறது)

நீங்கள் சொன்னது: (8)
At 9:13 PM, Anonymous சொல்வது என்னவென்றால்...
good review man, just came to know abt your blog through your other review on mouthshut.com Well, I was impressed to see your review on Madurai Idli Shop as I am too from madurai though working here in Delhi (Oh missing my home town now!) I was little curious to know more about you but cudn't get more info frm your blog. Anyway, keep them coming.


At 7:59 AM, தயா சொல்வது என்னவென்றால்...
படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருக்கின்ற நிலையில் விமர்சனம் என்கிற பெயரில் முழு கதையை எழுத என்னால் முடியவில்லை. காரணம் விமர்சனம் படித்துவிட்டு கூடுதல் எதிர்பார்ப்போடு படத்துக்கு போவது. அல்லது பிறகு பார்கலாம் என ஆர்வம் குறைந்துவிடுவது.

அதே நிலையில் படத்தை பார்த்துவிட்டு விமர்சனங்களை படிக்கும்பொழுது நமக்கும் இதே போல தோன்றியதே என மகிழச்சி கொள்வது (நல்ல படமென்றால்) அல்லது சமாதனம் அடைவது (மோசமான படத்துக்காக)

அதனால் விமர்சனத்தில் கதை தேடுபவர்கள் என்னை மன்னீப்பீர்களாக.


At 8:21 AM, தயா சொல்வது என்னவென்றால்...
புன்னபை பூ கீதாவின் பட்டியல் என்பதால் யார் அந்த கீதா என குழம்பிக்கொண்டிருந்தேன். "புன்னகை பூ" ரேகா மற்றும் காவேரி நடித்திருந்தது. தாணு தான் தயாரிப்பாளர். அப்புறம் யார் இந்த கீதா என புரியவில்லை.

விஷ்ணுவர்தனின் முதல் படமான அறிந்தும் அறியாமலேயில் கடைசி காட்சியில் ஒரு பெண் கலெக்டர் வருவார். இது யாருடா என சொல்லும்படியான தோற்றம். திலகவதி ஐ.பி.எஸ் போல மிரட்டும்படியான தோற்றம்.

பட்டியலிலும் அதே பெண்மணி கொலைக்கு உத்தரவிடும் மருமகளாக வருகிறார். இப்படிக்கூட பெண்களா என கொஞ்சம் பயம் தான்.

ஆங்! அவர் தான் கீதாவாம். புண்ணகை பூவின் இயக்குனராம். அடங்கொக்கா மக்கா இது நாள் வரையில் அதை இயக்கியது ஒரு ஆண் என நான் நினைத்திருந்தேன். அந்த படம் வந்த சமயத்தில் இன்றைக்கு "கண்ட நாள் முதல்" பிரியாவிற்கு கிடைக்கிற பாராட்டோ விளம்பரமோ பார்த்ததாகவோ படித்ததாகவோ ஞாபகமில்லை.

எனினும் டூயட் மூவிஸ் போல கீதாவும் வித்தியாசமான அதே நேரத்தில் வியாபாரத் தன்மையோடும் படங்கள் தருவது நம்பிக்கையளிக்கிறது.


At 11:26 PM, Anonymous சொல்வது என்னவென்றால்...
புன்னபை பூ கீதா from malaysia . she was dj in tamil radio in malaysia.

//புண்ணகை பூவின் இயக்குனராம்//
avar antha padathin eyakunar iilai.


At 1:54 AM, முத்துகுமரன் சொல்வது என்னவென்றால்...
கீதா இயக்குநர் இல்லை. தயாரிப்பாளர்:-))

புன்னைகை பூவே இயக்கம் வடிவுக்கரசி புகழ் எஸ்.டி.சபா:-)))


At 1:55 AM, வசந்தன்(Vasanthan) சொல்வது என்னவென்றால்...
என்னதான் இருந்தாலும் சமீபத்திய தமிழ்ப்படச் சூழல் சற்று திருப்தியளிப்பதாக இருக்கிறது. (எல்லாம் தலைகளின் படம் வரும் வரைதான்).
பட்டியல் படத்தில், வன்முறையை நியாயப்படுத்த எதுவுமில்லை. கதை தன்போக்கிலேயே போகிறது. முடிவும் இயல்பாகவே இருக்கிறது. சகட்டு மேனிக்குச் சீவுசீவென்று தலைகளைச் சீவிவிட்டு கடைசியில் இரண்டோ ஐந்தோ வருட சிறைத்தண்டனைக்குப்பின் நாயகியோடு கைகோர்த்துக் கொண்டு வரும் அபத்தங்கள் இப்படத்திலில்லை. நாயகத்துதியில்லாமல், சுயதம்பட்ட வசனங்களில்லாமல் இயல்பாகவே வந்தபடம்.

ஆர்யாவை அறையில் அடைத்துவிட்டு சாமி வெளியே வந்துவிடுவார். பின் ஆர்யாவைக் கொல்ல உள்ளே சண்டை நடக்கும். ஆர்யாவும் சளைக்காமல் சண்டைபோடுவார். பின் உள்ளேயொரு துப்பாக்கிச் சத்தம் கேட்கும். சாமி அறைக்குள் போவார். வழமையான தமிழ்ப்படங்கள் போல, "நாயகன் செத்திருக்க மாட்டான், எதிரிதான் செத்திருப்பான்" என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கே செத்துக்கிடந்தது ஆர்யாதான். இப்படி வழமைக்கு மாறான சிலகாட்சிகள்.

கதையை எழுதாமல் பதிவெழுதியதற்கு நன்றி.

எதையும் ஒப்பிட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தவகையில் தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தக்க படம் பட்டியல்.


At 6:29 AM, தயா சொல்வது என்னவென்றால்...
கீதா பற்றிய நான் கொடுத்திருந்த தகவல் தவறானது. கூகிள் செய்து "புன்னகை பூ" கீதா "புன்னகை பூவே" விற்கு தொடர்பில்லாதவர் என உறுதி செய்துகொண்டேன்.

தவறை சுட்டியதற்காக anonymous மற்றும் முத்துக்குமரனுக்கு நன்றி. வடிவுக்கரசி புகழ் சபா கைலாஷா அது? :)) இனி ஞாபகம் வைத்துக்கொள்வேன்


At 6:31 AM, தயா சொல்வது என்னவென்றால்...
வசந்தன்,

முடிவில் இருவருமே கொலை செய்யப்பட்டு விடுவார்கள் என்றே நான் எதிர்பார்த்தேன். எந்தவித கற்பிதங்களும் சினமா நியாயங்களும் இல்லாமல் படம் நகர்நத போதே இந்த படம் மரணத்தின் வழியை உறுதி செய்யும் என நம்பினேன். ஆனால் அது எப்படி நடக்கும் என்பது தான் கேள்வியாயிருந்தது. அதில் உள்ள திருப்பங்கள் தான் படத்தின் வெற்றியை தந்திருக்கிறது.

கீதா கொலை செய்பவர்கள் உயிரோடு இருக்கக்கூடாது என கண்டிஷன் போடும் போதே கதையின் போக்கு உறுதியாகிவிட்டது. நான் படம் பார்க்கையில் என் கவலையுமே இவர்கள் கொல்லப்பட வேண்டுமே என்பது தான். மாறாக ஹீரோத்த தனங்களால் சாமியை வெல்வார்கள் என்பதை அல்ல.

பரத் தனியாளக விடப்படும்போதே அவர் தான் முதல் என நினைத்தேன். பதம்பிரியா விவாகரம் முடிந்துவிட்டதாக நினைத்து மறந்துவிட்ட நிலையில் அவர் ரேப் செய்யப்பட்டுவிடுவது அவர் காதலன் பழி வாங்குவதற்கும் அதுவே தொடர் கொலைகள் நிகழ்வதற்கும் காரணமாகிவிடுகிறது.

ஊழ்வினை என்பது வந்து உருத்தும் என்ற கருத்தை அழுத்தமாக பதித்தற்கு இயக்குனரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

(ஆமாம் தலைகளின் படம் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? அஜீத்?)

3 கருத்துகள்:

சீனு சொன்னது…

//ஆர்யாவை அறையில் அடைத்துவிட்டு சாமி வெளியே வந்துவிடுவார். பின் ஆர்யாவைக் கொல்ல உள்ளே சண்டை நடக்கும். ஆர்யாவும் சளைக்காமல் சண்டைபோடுவார். பின் உள்ளேயொரு துப்பாக்கிச் சத்தம் கேட்கும். //

இந்த காட்சியில், ஹனீபாவின் முகத்தில் வியர்வையும், துப்பாக்கிச் சத்தம் கேட்கும் போது சிறிய ஒரு அதிர்ச்சியும் (யார் செத்தது என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். காரணம், ஆர்யா பிழைத்திருந்தால் சாமி மாட்டிக்கொள்வார்), கலக்கியிருப்பார் ஹனீபா.

"பணம் கம்மியாயிருக்கேன்னு பாக்குறேன்" - வசனம் நச் (நான் அக்கனத்தில் எதிர்பார்த்த வசனம்).

தமிழ் படங்களில் சமீபமாக (மறுபடியும்) கற்பழிப்பு காட்சிகள் காட்டப்படுவது, சற்றே வேதனையூட்டுவதாய் இருக்கிறது (உதா. சாமுராய், சுக்ரன், பட்டியல்). மீண்டும் பழையபடி போய்விடுவார்களோ என்று.

மேலும், "கத்தியால் குத்திவிட்டு ஏன் மண் அள்ளிப் போட சொன்னே?" என்பதற்கான பதில், இவர்களே சிற்சில யோசனைகளை, தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துவிடுவார்களே என்று பயப்பட வேண்டியுள்ளது (எனக்கே அந்த தகவல் ஆச்சரியமாகவும், புதுசாகவும் இருந்தது).

தயா சொன்னது…

சீனு உண்மை தான் விவரம் தெரியாதவர்களுக்கு கூட விவகாரமாய் விளக்கி படம் எடுத்துவிடுகிறார்கள். சென்சார் என்ன செய்கிறதோ?

தயா சொன்னது…

நாம என்ன தினமும் கத்தி குத்துகளை நேரடியாகவா பார்த்துக்கொண்டிருக்கிறோம்?

அதனால் தகவல் புதுசு தான். படத்திற்கு தேவையில்லாத காட்சி மற்றும் விளக்கம். தவிர்த்திருக்கலாம். படத்தில் பரத் துப்பாக்கி சுட்டுக்கொள்ள கற்றுக்கொள்வது என எப்படி என்ற காட்சியும் இருக்கிறது. அப்போதாவது சென்சார் முழித்துக்கொண்டு நீக்கியிருக்கலாம்